விரைவுச் செய்திகள்

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

வலைதளத்தில் தேடு

Friday, April 15, 2011


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


பிறப்பு 
இயற்பெயர் : சுப்புரத்தினம்
ஏப்ரல் 29 1891
புதுவை
இறப்பு
ஏப்ரல் 21 1964 (அகவை 72)
சென்னை
புனைப்பெயர்
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்
தொழில்
தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி
இனம்
தமிழர்
நாட்டுரிமை
இந்தியர்
துணைவர்(கள்)
பழநி அம்மையார்
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார்.

 வாழ்க்கைக் குறிப்பு

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம். 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமிழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப்பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று பாரதி கூற பாரதிதாசன் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனைப் பெயர்களில் எழுதி வந்தார்.
தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார், அதன் காரணமாக கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.
பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது. இவருடையப படைப்புகள் தமிழ்நாடு அரசினரால் 1990இல் பொது உடைமையாக்கப்பட்டன.

மறைவு

கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மன்னர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.

பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள்

புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

பாரதிதாசனின் ஆக்கங்கள்

 • பாரதிதாசனின் கவிதைகள் (கவிதைத்தொகுப்பு)
 • பாண்டியன் பரிசு (காப்பியம்)
 • எதிர்பாராத முத்தம் (காப்பியம்)
 • குறிஞ்சித்திட்டு (காப்பியம்)
 • குடும்ப விளக்கு (கவிதை நூல்)
 • இருண்ட வீடு (கவிதை நூல்)
 • அழகின் சிரிப்பு (கவிதை நூல்)
 • தமிழ் இயக்கம் (கவிதை நூல்)
 • இசையமுது (கவிதை நூல்)
 • அகத்தியன் விட்ட புதுக்கரடி
 • பாரதிதாசன் பதிப்பகம் அமைதி
 • செந்தமிழ் நிலையம்,இசையமுதம் (முதல் பாகம்)
 • பாரதசக்தி நிலையம் (1944)
 • இசையமுதம் (இரண்டாம் பாகம்)
 • பாரதசக்தி நிலையம் (1952) இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்)
 • குடியரசுப் பதிப்பகம் (1939)
 • இருண்ட வீடு,முத்தமிழ் நிலையம் இளைஞர் இலக்கியம்
 • பாரி நிலையம் (1967) உரிமைக் கொண்டாட்டமா?
 • குயில் (1948) எதிர்பாராத முத்தம்
 • வானம்பாடி நூற்பதிப்புக் கழகம் (1941)
 • எது பழிப்பு
 • குயில் (1948) கடவுளைக் கண்டீர்!
 • குயில் (1948)
 • கண்ணகி புரட்சிக் காப்பியம்
 • அன்பு நூலகம் (1962) கதர் ராட்டினப் பாட்டு
 • காசி ஈ.லட்சுமண பிரசாத் (1930)
 • கற்புக் காப்பியம்
 • குயில் (1960)
 • காதல் நினைவுகள்,செந்தமிழ் நிலையம் (1969)
 • காதல் பாடல்கள்,பூம்புகார் பிரசுரம் (1977)
 • காதலா - கடமையா?,பாரதிதாசன் பதிப்பகம் (1948)
 • குடும்ப விளக்கு (ஒரு நாள் நிகழ்ச்சி)பாரதிதாசன் பதிப்பகம் (1942)
 • குடும்ப விளக்கு (திருமணம்)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
 • குடும்ப விளக்கு (மக்கட் பேறு)பாரதிதாசன் பதிப்பகம் (1950)
 • குடும்ப விளக்கு (விருந்தோம்பல்)
 • முல்லைப் பதிப்பகம் (1944)
 • குடும்ப விளக்கு (முதியோர் காதல்)
 • பாரதிதாசன் பதிப்பகம் (1950)
 • குயில் பாடல்கள்பூம்புகார் பிரசுரம் (1977)
 • குறிஞ்சித் திட்டு,பாரி நிலையம்
 • சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
 • சேர தாண்டவம் (நாடகம்),பாரதிதாசன் பதிப்பகம் (1954)
 • தமிழச்சியின் கத்தி,பாரதிதாசன் பதிப்பகம் (1949)
 • தமிழியக்கம்,செந்தமிழ் நிலையம் தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
 • திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்
 • தேனருவி இசைப் பாடல்கள்
 • பாரதிதாசன் பதிப்பகம் (1955)
 • நல்ல தீர்ப்பு (நாடகம்),முல்லைப் பதிப்பகம் (1944)
 • நீலவண்ணன் புறப்பாடு
 • பாண்டியன் பரிசு
 • முல்லைப் பதிப்பகம் (1943) பாரதிதாசன் ஆத்திசூடி
 • பாரதிதாசன் கதைகள்முரசொலிப் பதிப்பகம் (1957)
 • பாரதிதாசன் கவிதைகள்,கடலூர் டி.எஸ்.குஞ்சிதம் (1938)
 • பாரதிதாசன் கவிதைககள் (முதற்பாகம்)
 • குடியரசுப் பதிப்பகம் (1944) பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் பாகம்)
 • பாரதிதாசன் பதிப்பகம் (1952)
 • பாரதிதாசன் நாடகங்கள்
 • பாரி நிலையம் (1959) பாரதிதாசன் பன்மணித் திரள்
 • முத்தமிழ்ச் செல்வி அச்சகம் (1964)
 • பிசிராந்தையார், பாரி நிலையம் (1967)
 • புரட்சிக் கவி,துரைராசு வெளியீடு (1937)
 • பெண்கள் விடுதலை
 • பொங்கல் வாழ்த்துக் குவியல்,பாரதிதாசன் பதிப்பகம் (1954)
 • மணிமேகலை வெண்பா
 • அன்பு நூலகம் (1962) மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
 • முல்லைக் காடு,காசி ஈ.லட்சுமண பிரசாத் (1926)
 • கலை மன்றம் (1955) விடுதலை வேட்கை,
 • உயிரின் இயற்கை,மன்றம் வெளியீடு (1948)
 • வீட்டுக் கோழியும் - காட்டுக் கோழியும்,குயில் புதுவை (1959)
 • தமிழுக்கு அமுதென்று பேர்
 • வேங்கையே எழுக ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
 • புகழ் மலர்கள் நாள் மலர்கள்
 • தலைமலை கண்ட தேவர் (நாவலர்கள்)பூம்புகார் பிரசுரம் (1978)
பாரதிதாசன் பற்றி சுவையான சிறு குறிப்புகள்
வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன்.


·         சுப்புரத்தினம்- பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைக் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்ற பட்டங்களே அடையாளம்!

·         கவிகாளமேகம், ராமானுஜர், பாலாமணி அல்லது பக்காத் திருடன், அபூர்வசிந்தாமணி, சுபத்திரா, சுலோசனா, பொன்மூடி, வளையாபதி ஆகிய படங்கள் அவரது பங்களிப்புடன் வந்தன. புதுவை கே.எஸ்.ஆர், கண்டெமுது  வோன், கிறுக்கன், கிண்டல்காரன் ஆகியவை இவரது புனைபெயர்கள்!

·         `வளையாபதி படத்துக்கு இவர் எழுதிக் கொடுத்த வசனத்தில் சில வரிகள் மாற்றப்பட்டதால் 40 ஆயிரம் பணத்தையும் நான்கு படங்களுக்கான ஒப்பந்தங்களை தூக்கி எறிந்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து கம்பீரமாக வெளியேறியவர்!

·         கோழி, புறா, பசு மூன்று அவர் விரும்பியவை `டேய் என்பார் கோழியை. `வாம்மா என்பார் சேவலை `வீடு என்று இருந்தால் இம்மூன்றும் இருக்க வேண்டும் என்று சொல்லித் தானும் வளர்த்து வந்தார்!

·         யார் பேசும்போது மூக்கின் மீது விரல்வைத்தபடியே உன்னிப்பாகக் கவனிப்பார். எழுதும்போது மை சிந்தி விட்டால் அதைப் பூவாக மாற்றிவிட்டுத்தான் எழுதுவார். பாயைத் தரையில் விரித்து, தலையணை மீது குப்புறப்படுத்தபடியேதான் எழுதுவார்!

·         `என்னை ஏன் மக்கள் போற்றுகிறார்கள்? என்னுடைய அஞ்சாமைதான் அதற்குக் காரணம். மடமையை ஆதிரிப்பவர்களை, தமிழ்ப் பண்பாட்டினை இகழ்பவர்களை நான் திட்டுவேன். நீங்களும் திட்டுங்கள்! என்று தமிழக மக்களுக்கு உத்தரவு போட்டவர்!

·         `உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுகிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன் என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்!

·         `ஏம்ப்பா... தி.நகர் வர்றியா? ஆட்டோக்காரரைக் கேட்டார். `தி. நகருக்கு வரலஎன்றார் அவர். `அப்ப ஏம்ப்பா இங்க நிக்கிற? என்று சண்டைக்குப் போனார் பாரதிதாசன். உணவு விடுதியில், `சூடா தோசை இருக்கு என்றார் கடைக்காரர். ஆனால், ஆறிய தோசை வந்தது. `இதுதான் உன் அகராதியில சூடா? என்று கொந்தளித்தார். இப்படி அவர் நித்தம் யுத்தம் செய்த இடங்கள் ஏராளம்!

·         பிறந்தது, வளர்ந்தது. வாழ்ந்தது, உயர்ந்தது அனைத்தும் புதுசேரியில். கடைசி இரண்டு ஆண்டுகள் சென்னையில் குடியேறி வாழ்ந்து வந்தார். `சென்னை அவரைக் கொன்றுவிட்டது என்பார்கள் நண்பர்கள்!

·         புதுச்சேரியில் ஒரு முறை புயல் சுழன்றடித்தபோது இவரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குத் தூக்கி எறிந்தது சூறாவளி. ஒரு முழு நாள் கழித்து வீட்டைத் தேடிக் கண்டு பிடித்து வந்தார். அவரது `பறந்து திரிந்த அனுபவங்களைக் `காற்றும் கனகசுப்புரத்தினமும் என்ற கட்டுரையாக வடித்தார் பாரதியார். அந்தக் கதையை மறுபடி மறுபடி சொல்லிக் கேட்டவர் அரவிந்தர்!

·         நாடு முழுவதும் நிதி திரட்டி 25 ஆயிரம் ரூபாயை இவருக்கு வழங்கினார் அண்ணா. `நான் கொடுக்க நீங்கள் வாங்கக் கூடாது என்ற அண்ணா. அந்தப் பணத்தைக் கையில் ஏந்தி நிற்க... பாரதிதாசன் எடுத்துக்கொண்டார்!

·         பாரதிதாசன் என்று இவர் பெயர் மாற்றம் செய்தை தி.க-வினர் கடுமையாக எதிர்த்தார்கள். `சாதிக் கொடுமையை உண்மையாக எதிர்த்தவர் பாரதி. அவரைப்போலவே எளிய நடையில் மக்களுக்கு வேண்டிய கருத்தை இயற்ற வேண்டும் என்பதால். பாரதிதாசன் எனப்பெயர் வைத்துக் கொண்டேன். யார் எதிர்த்தாலும் கவலை இல்லை என்றார்!

·         ஆஷ் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்தபோது, அவரை போலீஸீக்குத் தெரியாமல் கட்டுமரத்தில் ஏற்றி, நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்த அஞ்சாமைக்குச் சொந்தக்காரர்!

·         எப்போதும் பச்சை சால்வைதான் அணிவார். அதற்குள் ஒரு கத்தியும் ஒரு வாளும் வைத்திருப்பார். இரவில் எங்கு சென்றாலும் அதை மறக்காமல் எடுத்துச் செல்வார்!

·         புதுச்சேரி வேணு நாயக்கரின் சிலம்புக் கூடத்தில் சிலம்பம் கற்றார். குத்துச்சண்டையும் குஸ்தியும் தெரியும். அதற்காகவே உடும்புக் கறியை அதிகமாகச் சாப்பிட்டார். `உடல் நலனைப் பேணுதலே அனைத்துக்கும் அடிப்படை என்பார்!

·         `சுப்புரத்தினம் எனக்காக ஒரு பாட்டு எழுதேன் என்று பாரதியார் கேட்டுக் கொண்டதும் இவர் எழுதிய பாட்டுதான், `எங்கெங்கு காணினும் சக்தியடா!

·         பள்ளி ஆசிரியராக 37 ஆண்டுகள் இருந்தார். அவரை நிம்மதியாக ஓர் இடத்தில் பணியாற்றிவிடாமல் 15 பள்ளிகளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தார்கள், `அரசியல் ஈடுபாடு இல்லாமல் இருந்தால் என்னை மாற்ற மாட்டார்களாம். அரசியல் இல்லாமல் என்னால் எப்படி இருக்க முடியும்? என்று கொதித்தார்!

·       ` என்றால் அணில் என்று இருந்ததை `அம்மா என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான் இவர்தான்!

·         மளிகைக் கடைப் பொட்டலங்களில் இருக்கும் சணல், நூல் ஆகியவற்றைச் சேகரித்துவைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. `நான் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன். மளிகைக் கடையில் வளர்ந்தவன். நூலின் அருமை எனக்குத்தான் தெரியும் என்பார்!

·         இசை, மெட்டு குறையாமல் பாடக்கூடிய ஆற்றல் பெற்றவர். தான் எழுதிய பாடல்கள் அனைத்தையும் தானே பாடுவார். `வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பாடலை இவர் பாடிக்கொண்டு இருக்கும்போதுதான் பாரதியார் இவரை முதன் முதலாகப் பார்த்தார்!

·         பழனியம்மாள் இவரது மனைவி. இவர்களுக்கு சரஸ்வதி, வசந்தா, ரமணி ஆகிய மூன்று மகள்களுக் மன்னர் மன்னன் என்ற மகனும் உண்டு!

·         பாண்டியன் பரிசு திரைப்படம் எடுக்கவே சென்னை வந்தார். சிவாஜி, சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா நடிக்க ஒப்பந்தம் ஆனது. ஆனால், படப்பிடிப்பு துவஙகவே இல்லை. பாரதியார் வாழ்க்கை வரலாற்றைச் சினிமாவாக எடுக்கத் தொடக்க கலத்தில் முயற்சித்து கதை, வசனம் எழுதிவைத்திருந்தார். அதுவும் சாத்தியமாகவில்லை. பாவேந்தரின் திரைப்பட ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை!

·         `தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும். முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள். பிறகு, உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்! என்று கட்டளையிட்டார்!

·         ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரதிய ஞானபீட விருது இவருக்குத் தருவதாக முடிவானது. அதற்குள் அவர் இறந்து போனார். அவ்விருது, வாழும் கலைஞர்களுக்குத் தரப்படுவது என்பதால். இவருக்குக் கிடைக்கவில்லை!

·         `வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை.... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை. நன்மைக்கும் உண்மைக்கும் ஒருவன் அன்புடன் எழுதினால் என்றும் நிலைக்கும் அதைத்தான் நான் செய்கிறேன் என்றவரின் உடல் புதுச்சேரியில் அடக்கம் செய்யப்பட்டபோது, திரண்ட கூட்டம் அவரது கவிதைக்குக் கிடைத்த அங்கீகாரம் மயானக் கரையில் வைத்து அவ்வை டி.கே. சண்முகம் பாடினார்... `துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இன்பம் சேர்க்க மாட்டாயா!

1 comment:

பிரபலமான இடுகைகள்

பார்த்த பக்கங்கள்